- மாணவர் ஒழுக்க கோர்வை
திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் கல்வி கல்லூரியில் கற்கும் மாணவிகள் தரமான கல்வியை பெற்றுக் கொள்வதற்கும், சிறந்த ஒழுக்கமுள்ள சமூகப் பிரசைகளாவதை நோக்கமாகக் கொண்டும் உருவாக்கப்பட்டதே இம் மாணவர் ஒழுக்க கோவையாகும். நற்பெயரையும் கீர்த்தியையும் புகழையும் மேலும் உயர்நிலைக்கு இட்டுச் செல்லல் என்பது இக்கல்லூரியின் முதன்மை எதிர்பார்ப்பாகும். இவற்றில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளான கல்வி, ஒழுக்கம் என்றவற்றினை மேன்மை அடையச் செய்து சமூகத்திற்கு முன் உதாரணமான பிரசைகளை உருவாக்கல் என்பதே நோக்கமாகும்.
01. சகல மாணவிகளும் காலை 7.15 மணிக்கு முன்பாக கல்லூரிக்கு சமூகம் அளிக்க வேண்டும் கல்லூரிக்கு பிந்தி வரும் மாணவிகள் கல்லூரி ஒழுக்க விதிகளை மீறியதாக கருதப்படுவார்கள்.
02. பாடசாலைக்கு தாமதமாக வரும் மாணவர்கள் ஒழுக்காற்று குழுவின் மேற்பார்வையின் கீழ் மாணவத் தலைவர்களால் அடையாளம் காணப்பட்டு அவர்களின் விபரங்கள் தாமதமாக வரும் மாணவர்கள் பதிவேட்டில் பதியப்படும். தொடர்ச்சியாக தாமதமாக வருகை தருதல் நன்மதிப்பை குறைக்கும் செயலாக அமையும்.
03. இரு வாரங்களுக்குள் குறைந்தது மூன்று நாட்கள் தாமதமாக வரும் மாணவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் பாடசாலைக்கு வருகை தந்து மாணவர்களின் தாமதம் பற்றி தெளிவுபடுத்த வேண்டும்.
04. ஒரு வருடத்தில் மாணவர்களின் வரவு 80% குறைவாக காணப்படும் எனின் அவர்கள் க.பொ.த (சா/த) க.பொ.த (உ/த) போன்ற பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவது பற்றி பரிசீலிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.
05. மாணவர்கள் பாடசாலை நடைபெறும் நேரங்களிலும் கல்லூரி விழாக்களிலும் பகிரங்க தேர்வுகளிலும் பாடசாலையை அடையாளப்படுத்தும் பாடசாலைக்குரிய எந்த ஒரு பதிவுகளிலும் பாடசாலை சீருடையை கட்டாயம் அணிதல் வேண்டும்.
06. அபாயகரமான ஔடதங்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள், தீய நடத்தையை தூண்டும் பொருட்கள், கையடக்க தொலைபேசிகள், இசை உபகரணங்கள், நிழற்றப்பட கருவிகள், இலத்திரனியல் சாதனங்கள் போன்றவற்றை பாடசாலை வளாகத்தினுள் எடுத்து வரமுடியாது.
07. பாடசாலை நேரத்திலும், இடைவேளை தவிர்ந்த ஏனைய நேரங்களிலும் மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளியேறுவதற்கான அனுமதியை பொறுப்பாசிரியரிடம் பெற்றிருக்க வேண்டும். வகுப்பறையை விட்டு தேவை கருதி வெளியேறும் மாணவிகள் Exit Pass அட்டையை வைத்திருக்க வேண்டும்.
08. பாடசாலை நேரத்தில் மாணவிகள் பின்வரும் விடயங்களை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
- MUSIC- காலை கூட்ட ஆரம்பத்திற்கு முன்னர் கடமைகளை முடித்தல்.
- பாடசாலை ஆரம்ப முடிவு வேளைகளில்அறிவுறுத்தல்களுக்கு அமைய ஒழுங்குடன் செயற்படல்.
- SILENCE TIME- வகுப்பறைக்கு அல்லது கட்டடங்களுக்கு வெளியே உயர அடிப்படையில் அமைதியாக நிற்க வேண்டும்.
- இறை வழிபாடு,பாடசாலை கீதம், தேசிய கீதம், சுற்றாடல் கீதம், தமிழ் தாய் வாழ்த்து பாடல் என்பவற்றை மாணவிகள் வாய் திறந்து பாட வேண்டும்.
09. பாடசாலை முடிவடைந்து அரை மணி நேரத்திற்குள் பிள்ளைகளை பெற்றோர்கள் அழைத்துச் செல்ல வேண்டும் அதன் பின்னர் பிள்ளையை பாடசாலையில் காத்திருக்க வைத்து வீண் சிரமங்களை ஏற்படுத்தக் கூடாது என்பதை பெற்றோரும் மாணவரும் அறிந்திருக்க வேண்டும்.
10. ஆசிரியர்களால் நடத்தப்படும் மேலதிக வகுப்புகளுக்கு மாணவர்கள் கட்டாயம் சமூகம் தர வேண்டும்.வருகை தராத மாணவர்கள் வருகைதராததற்கான காரணங்களை பெற்றோர் மூலம் எழுத்தில் தரவேண்டும்.
11. கல்லூரியில் நடைபெறும் சகல பரீட்சைகளுக்கும் மாணவர்கள் சமூகமளிக்க வேண்டியது மிக கட்டாயமானதாகும். சமூகமளிக்காத மாணவர்கள் பெற்றோருடன் வருகை தந்தால் மட்டுமே வகுப்பில் அனுமதிக்கப்படுவார்கள்.
12. தவணை பரீட்சையின் பின்னர் வழங்கப்படும் தேர்ச்சி அறிக்கைகளை பெற்றோர் அல்லது பாதுகாவலர் பார்வையிட்டு கையொப்பமிட்டு உடனடியாக தவணை ஆரம்பித்ததும் ஆசிரியரிடம் ஒப்படைத்தல் வேண்டும். பாடசாலை தவணை முடிவில் தேர்ச்சி அறிக்கையை பெற்றுக்கொள்ள தவறும் மாணவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வந்து தேர்ச்சி அறிக்கையினை பெற வேண்டும்.
13. ஆய்வுக்கூடம்,நூலகம், மனையியல் அறை, கணினி பிரிவு போன்றவற்றிற்கு செல்லும்போது திரும்பி வரும் வேண்டும்போதும் மாணவர்கள் ஒழுங்கை பேண .
14. பாடசாலைக்கு வரும்போது தங்க நகைகள் அணிந்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது.காதில் மட்டும் ஒரு சிறிய தோடு அணியலாம். பெறுமதியான தங்க நகைகள் அணிந்து வரும் சந்தர்ப்பத்தில் அவை தொடர்பான இழப்புகளுக்கு பாடசாலை நிர்வாகம் எந்தவித பொறுப்பு ஏற்காது.
15. பாடசாலை நேரத்தில் திடீரென நோய்கள் ஏற்படுதல் மற்றும் விசேட சந்தர்ப்பங்களில் மாணவர்கள் வெளியில் செல்ல வேண்டிய தேவை ஏற்படும் எனில் பின்வரும் ஒழுங்கு முறைகளை பின்பற்றல் வேண்டும்.
- வகுப்பாசிரியர் ஊடாக அதிபரிடம்/பிரதி அதிபரிடம்/உதவி அதிபரிடம் முறையிடல் வேண்டும்.
- அவர் வீடு செல்ல வேண்டியதன் அவசியம் பற்றி விசாரணை செய்வார்.
- தேவை ஏற்படும் எனின்SICK ROOMக்கு அனுப்பி ஓய்வெடுக்கச் செய்தல்.
- தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வகுப்பாசிரியர் அல்லது பாட ஆசிரியரின் ஊடாக பாடசாலை தொலைபேசி மூலம் பெற்றோருக்கு அறிவித்தல்.
- பெற்றோர் வருகை தந்த பின்னர் வகுப்பு பதிவேட்டிலும்(LOG BOOK) மாணவர் வெளியேறும் பதிவேட்டிலும்(STUDENTS DEPARTURE BOOK) பதிவு செய்த பின்னர் அழைத்துச் செல்லலாம்.
16. தேநீர் இடைவேளையின் போதும், வேறு வைபவங்களின் போதும், பாடசாலை நேரத்திலும் மாணவர்கள் சிற்றுண்டிச்சாலை,வகுப்பறைகள், கல்லூரி வளவுகள் முதலியவற்றை அசுத்தப்படுத்தாது உரிய கழிவுப்பொருள் இடும் கூடைகளுக்குள் வேறுபடுத்தி இட்டு பாடசாலை வளாகத்தை சுத்தமாக பேண வேண்டும். பாடசாலை கட்டிடங்களுக்கும் மற்றும் சொத்துக்களுக்கும் தாவரங்கள்,மரங்களுக்கும் எவ்வித சேதமும் விளைவிக்காமல் பாதுகாக்க வேண்டும்.
17. மாணவர்களுக்கு தெரிவிப்பதற்கு என தொலைபேசி மூலமாக வரும் எந்த செய்திகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.பெற்றோர்களிடம் இருந்து வரும் அவசரச் செய்திகள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும்.அத்துடன் தொலைபேசி மூலமாக நேரடியாக மாணவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது
18. தலைமுடிக்கு எண்ணெய் பூசி ஒழுங்காக அழகாக சீவப்பட்டு பின்னிய பின்னலை முதுகில் விட வேண்டும்.
19. விசேட தினங்களில் மாணவர் தலைவிகள் ஒற்றை பின்னல் இட்டு 3'' வரை விட்டு கறுப்பு றிபனினால் கட்ட வேண்டும். ஏனைய மாணவிகள் இரட்டை பின்னல் இட்டு இறுதியில் கறுப்பு றிபனினால் மடித்து கட்ட வேண்டும்.
20. நீளமான கூந்தல் ஆயின் இடுப்பு பட்டிக்கு மேல் மடித்து இருத்தல் வேண்டும்.
21. தலையின் முன்புறத்தில் கட்டையாகக் கூந்தலை கத்தரிப்பது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.கண் புருவங்கள் இமைகள் திருத்தப்படுவது முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.
22. சப்பாத்து கருப்பு நிறமாகவும் ஒட்டக்கூடியதாகவும், காலுறை வெள்ளை நிறமாகவும் சுத்தமாகவும் இருத்தல் வேண்டும்.
23. இணைபாடவிதான செயற்பாட்டிலும் விளையாட்டு நிகழ்வுகளிலும் ஈடுபடும் மாணவர்கள் கல்லூரியின் ஒழுக்கவிழுமியங்களுக்கு கீழ்ப்படிந்து நடந்து கொள்ள வேண்டும்.
24. கழகங்கள்,மன்றங்கள், விளையாட்டு நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளுக்கு பங்குபற்றும்போது பாடசாலை கௌரவத்திற்கும்,நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்காத வண்ணம் செயற்பட வேண்டும்.
25. கழகங்கள்,மன்றங்கள், விளையாட்டு நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளுக்கு அழைக்கப்பட்டு செல்லுகின்ற போது பொறுப்பாசிரியரது வழி நடத்துவதற்கு மாணவர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
26. பாடசாலை விளையாட்டு குழுவில் அங்கம் வகிக்கும் மாணவர்கள் பாடசாலைக்கு வெளியே உள்ள விளையாட்டு குழுக்களில் அங்கம் வகிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
27. பாடசாலைக்கு வெளியே நடைபெறுகின்ற இணைபாடவிதான செயல்பாடுகளில் பங்கு பற்றும் மாணவர்கள் அதிபரின் அனுமதிக்கு விண்ணப்பித்து எழுத்து மூலம் பெற்றிருப்பது கட்டாயமானதாகும்.இதனைச் செயல்படுத்த தவறும் பட்சத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகளுக்கு பெற்றோர்களே பொறுப்பாளர் ஆவர்.
28.இணைபாடவிதான செயற்பாட்டில் ஈடுபடும் மாணவர்கள் கல்லூரி சீருடையில் அல்லது ஆசிரியரால் விதந்துரைக்கப்பட்ட உடையில் சமூகமளிக்க வேண்டும்.பயிற்சிகளில் கலந்து கொள்ள முடியாதுவிடில் அதற்கான காரணத்தை எழுத்து மூலமாக பொறுப்பாசிரியருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
29. மாலை 6 மணிக்கு முன்பாக நிகழ்வுகள்,பயிற்சிகளை நிறைவு செய்து பாடசாலை சூழலை விட்டு வெளியேறி விரைவாக வீடுகளுக்கு சென்றடைய வேண்டும்.மேலதிக நேரம் தேவை எனின் அதிரிடம் விசேட அனுமதி பெற வேண்டும்.
30. பொது இடங்களில் பொது நிகழ்வுகளில் பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடிய வகையில் நடந்து கொள்ளும் எந்த ஒரு மாணவியின் மீதும் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.